Saturday, February 5, 2011

நவ நாகரீகம்

முடியை சீர்படுத்தி..
முகத்தை மழித்து..
உடம்பை குளித்து..
ஆடையைச் சலவை செய்து..
காலணியைப் பளபளப்பாக்கி..
அழகாய் அணிந்து கொண்டான்..
ஆனால்,
மனதை மட்டும்..?

வரதட்சணை.

சுரங்கம் தோண்டாமலே
தங்கம் எடுக்கின்றனர்
மாப்பிள்ளை வீட்டார்...

ஆங்கிலத்தைக் கற்றுக் கொள் அதில் தவறில்லை!!

உலக மொழியாம் ஆங்கிலம்
உயர் படிப்பென்றாலும்
வெளிநாட்டுப் பயணமென்றாலும்
கைகொடுத்துதவும் மொழி
அதனால் ஆங்கிலத்தைக் கற்றுக் கொள்
அதில் தவறில்லை
அதற்காக நீ
தமிழை மறப்பது ஏனெனப் புரியவில்லை?
தெரிந்து கொள்
உனக்கு ஆங்கிலம் தெரியுமென
காட்டும் இடம்
தமிழல்ல..!!!

என்ன சொல்லி அழைப்பது

எதிரே வருவது
குருடன் எனத் தெரிந்தும்
இடித்து விட்டுப் போவோரை
என்ன சொல்லி
அழைப்பது ?

அமாவாசை

நிலவு
வெளியே
தலை காட்ட
வெட்கப்பட்டது..!!
"அமாவாசை"

வேகம்...

இப்பொழுதெல்லாம்
என்னக்கு
காலத்தின் வேகம்
குறைந்து விட்டது
காரணம்
எண்ணத்தின் வேகம்
அதிகரித்து விட்டதால்..!!

நாங்கள் பூக்கள் பேசுகிறோம்..

மனிதனே...
இறைவன்
உங்களுக்கு
மனதை படைத்தான்....
எங்களுக்கு
மணத்தைக் கொடுத்தான்...!!

நாங்கள்
பூமியின் மேற்பரப்பில்
சிதறிக்கிடக்கும்
மாணிக்கங்கள்...
வைர
வைடூரியங்கள்..!!

நாங்கள்
எதையும்
எங்கும் யாசிப்பதில்லை...!!

தேடி வரும்
தென்றலை
மதிக்க தவறியதும் இல்லை..!!

தேசியக்கொடியின்
உச்சியில் இருந்து
உதிர்தலுக்கும்...

மணவாழ்வின்
உதயத்திற்கும்...
மங்கையரின்
கார்குழல் எழிலுக்கும்.....

இறைவனின்
திரு உருவத்திற்கும்...
மரணித்த உங்கள்
கல்லறைக்கும்....

இன்னும்
எல்லாவற்றுக்குமாய்
எங்களை
இணைத்துக் கொண்டவர்கள்
நாங்கள்.....

எங்கள்
வாழ்வையே
பிறருக்காக மட்டுமே
தியாகிக்கிறோம்......!!
நீங்கள்......??

என்ன கண்டேன்.

தினம் தினம்
கவிதை எழுதி
என்ன
கண்டேன் - என்று
தெரியவில்லை..

ஒரு
மகிழ்ச்சி
மட்டும் மனதில்
தமிழை சுவாசிப்பதால்

விட்டில் பூச்சிகள்

கணினி வலைப்பின்னல் தனில்
உலகம் சுருங்கி விட்டது.

தேவைகள் ஏனோ
அதிகரித்துக் கொண்டே போகிறது....

கைகளில் சிணுங்குகிறது
கையடக்கமாய் தொலைபேசி...

வாய் முணுமுணுக்கிறது
புரியாத பாசையில் துள்ளிசைப்பாடல்...

நம்நாட்டுக் கால நிலைக்கு
சற்றேனும் ஒத்துவராத ஆடைகள்...

புருவம் முதல் தொப்புள் வரை
விதவிதமாய் ஆபரணங்கள்...

ஆறாம் விரலாய் பேனாவின் இடத்தில்
சில நொடி வாழும் புகைத்தல் சாதனங்கள்...

இவ்வாறெல்லாம்
நாகரீக முக மூடியணிந்து புன்னகைக்கிறது...

மை தடவிய இதழால்
இன்றைய சமுதாயம்...

மேலை நாட்டவரின்
வாழ்வியல் கோலம் தனை
நவ நாகரீகம் என நம்பும்
இவர்கள்
ஒளி வீசும் விளக்கை நாடிச்செல்லும்
விட்டில் பூச்சிகள்...!!

விடிவு.

பிறப்பது எல்லாம்
இறப்பது என்பது
இறைவன் வகுத்த முடிவு - அதற்குள்

காலம் கருதி
வேலை புரிந்தால்
நீயே இருட்டின் விடிவு.

ரசிப்பேன்

சிறகுகள் விரிக்கும்
பறவைகளோடு நானும்
பறக்க பாடம் படிப்பேன் - மனச்

சிறகினை விரித்து
வானில் பறந்து
புவியை சுற்றி வட்டமடிப்பேன்!

மேகம் சிந்திடும்
தூரல்க ளெல்லாம் - என்
தேகத்தில் வந்து
விழட்டும் என்பேன்!

பசுமை கொஞ்சிடும்
புல்வெளி மீது - என்
சுமைகளை கொஞ்சமாய்
இறக்கி வைப்பேன்!

சோகம் சுமந்திடும்
நெஞ்சத்துள் எல்லாம்
சுகமே வந்து
சேரட்டும் என்பேன்!

இயற்கையின் மடிதனில்
கருவாய் வசிப்பேன்
இருக்கிற வரைக்கும்
புவிதனை ரசிப்பேன் ...!!!

தமிழ்

எங்கோ பிறந்த
ஏனோ வளர்ந்த
ஏதோ ஒரு மொழியல்ல
தமிழ்

சிந்து வெளியின்
சின்னங்கள் கூறும்
தொன்மைத்
தமிழ்

சிந்தனையின்
சிகரங்கள் தூண்டும்
வீரத்தமிழரின்
வித்தைத்
தமிழ்

ஈரேழுலகாழும்
வீரப்புதலவர்களை
பெற்றகம் மகிழும்
தாய்த்
தமிழ்

இலக்கணக் கட்டுடல்
இலக்கியப் பட்டாடை
அழகிய திரு நுதலில்
பொட்டாய் பண்பாடு
இயல் இசை நாடகம்
இலங்கும் ஆபரணமாய்
பூண்ட தமிழ்த் தாயின்
உலகாட்சி
தமிழ்

கருக்கொண்ட
சொற்கள் கண்டதுண்டா?
தமிழில் உண்டு
தினை, பால், வழுவற்ற
செருக்குடன் மிளிரும்
செல்வ மொழி
தமிழ்

விண்ணுலகம் வியக்கும்
கோபுரங்கள்
கண் தவம் செய்த
சிற்ப ஓவியங்கள்
மண்ணில் கவிஎழுதும்
ஆடல் என
இன்னும் பல கலை வளர்த்த
பக்தி மொழி
தமிழ்

வாகை மலருக்கு ஏது
தட்டுப்பாடு
வானம் வரை இல்லை
கட்டுப்பாடு
என வேலும் வாளும்
சரித்திரம் எழுதிய
வீர மொழி
தமிழ்

காற்றை உருக்கி
காதலுக்கு தூதனுப்பி
நாற்று நடுபவரும்
நாடாளுமன்னரும்
போற்றும் குலப்
பண்பு குறையாமல்
பேசி மகிழ்ந்த
காதல் மொழி
தமிழ்

ஆதியோடு அந்தம்
இல்லாத மொழி
அலை மோதும் கடற்கோளும்
அலைக் கழிக்கும் இடம் பெயர்வும்
அழிக்க முடியாத
ஆரோக்கிய மொழி

ஆறாயிரம் ஆண்டு
தொன்மையின் சான்று
இன்னும் உறுதியாய் வாழும்
நூறாயிரம் ஆண்டு........

வா நண்பனே...!!

வா நண்பனே...!!
கடலில் விழுகின்ற மழைத் துளியாய்
நட்பில் நாமே கலப்போம்..!!

ஒரு மரம் ஒரு நாளும்
தோப்பாக முடியாது..!!

ஓர் கரத்தில் எழும் ஓசை
ஒருவருக்கும் கேட்காது..!!

நீ மட்டும் தனித்திருந்தால்
உலகம் என்றாகாது..!!

வா நண்பனே
வாழும் வரை நாம்
நட்பு பேணுவோம்..!!

உலகத்தின் நட்பால்
உயிர்கள் ஜீவிக்கும்..!!
உள்ளங்களின் நட்பால்
உன்னதம் ஜீவிக்கும்.

மனிதன்...

கோபம்..,
பொறமை..,
எடக்கு..,
ஏமாற்று..,
நப்பாசை..,
நயவஞ்சகம்..,
மொத்தமாகவும்,
சில்லறையாகவும்,
கிடைக்குமிடம்...!!!

"மனிதன்"

ஓய்வு...

காற்று மட்டும்
ஓய்வு எடுத்துக் கொண்டால்
காணாமல் போய்விடுவார்கள்
மனிதர்கள்..

நண்பர்கள்..!

மனித உறவுகளில் எல்லாம்
மகத்தானது நட்பு..!

மீளாத் துயிலில் வீழும் வரை
நில்லாமல் நீள்வது நட்பு..!

உலகளவு உயர்த்திச் சொல்ல
நட்பும் உயர்ந்தது...
நண்பர்களும் உயர்ந்தவர்கள்..!

நட்பின் முன் அணுகுண்டும்
அடங்கிப் போகும் தெரியுமா?

நட்பில் சாதியில்லை
நட்பில் மதங்கள் இல்லை
நட்பில் பேதமில்லை - அதனால்
நட்பில் குறைகள் இல்லை..!

மனங்கள் தெளிந்து கூடி
உயிரோடு கலப்பது
நட்பு..!

நம் உணர்வோடு
கலப்பவர்கள்
நண்பர்கள்..!

Tuesday, February 1, 2011

காதல்

காதல் என்பது
கரும்பலகை அல்ல,!
எழுதி எழுதி அழிப்பதற்கு...
அது,
கல்வெட்டு போன்றது !!
என்றும் நிலைத்திருக்கும்...
மண்ணோடு புதையும் வரை
நெஞ்சோடு வைத்திருப்பேன்
உன் நினைவுகளை...!!!